பதிவு செய்த நாள்

03 அக் 2018
12:21

பாகம் - 4

சனி கிரகத்தின் ஆறாவது துணைக்கோள் - 3
(கர்னல் ட்டி.டி.பியர்ஸ்,

லண்டன் ராயல் சொசைட்டி செக்ரட்டரிக்கு அனுப்பிய ஆவணம்
மதராஸ், 22, செப்டம்பர் 1783)

ஆசிரியர் : தரம்பால்
தமிழில் : B.R.மகாதேவன்


ஒரு பிராமணர் 108 வால் நட்சத்திரங்கள் பற்றிய அட்டவணையை எனக்குத் தருவதாகச் சொன்னார். நான் வங்காளத்துக்குத் திரும்பும்போது அந்த பிராமணர் உயிருடன் இருந்தால் சென்று அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்வேன். வால் நட்சத்திரங்களில் பல வகைகள் இருப்பதாக அவர் சொல்கிறார். சிலவற்றுக்கு வால் நீண்டதாக இருக்கும் . சிலவற்றுக்குக் குறுகலாக இருக்கும். சிலவற்றுக்கு விசிறி போன்று இருக்கும். சிலவற்றுக்கு எதுவுமே இருக்காது.  சில வால் நட்சத்திரங்கள் கிழக்கில் இருந்து மேற்காகச் செல்லும். சில விண்வெளியைக் கடந்து செல்லும். 

அவர் சொல்லும் இன்னொரு விஷயத்தை நான் எப்படிச் சொல்ல என்று தெரியவில்லை. இன்றைய காலகட்டத்துக்கு முந்தைய யுகத்தில் எழுதப்பட்ட புத்தகம் என்றும் நாம் சிருஷ்டி என்று சொல்வதில் இருந்து அந்தப் புத்தகம் தொடங்குவதாகவும் சொல்கிறார்.  

நாம் சமஸ்கிருதம் கற்றுக்கொண்டுவிட்டால் இதுபோன்ற புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதாகச் சொல்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அல்லது மறுதலிக்க முடியும். நான் என்னிடம் அவர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே சொல்கிறேன். எது உண்மை என்று எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மேலும் அந்த பிராமணர் என்னை ஏமாற்ற விரும்புவதாகவும் நான் நினைக்கவில்லை. ஒரு சீடனைப் போல் அவரிடம் தகவல்களை நான் கேட்டேன். அவர் சொல்லும் விஷயங்களை நமது வானவியல் கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டுக் கேள்வி கேட்டேன். அவர் சொன்னார்: வானவியலில் நாமும் இஸ்லாமியர்களும் மாறுபட்ட கோட்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும் இந்துக்களுடைய கோட்பாடுகளில் இருந்து வேறுபட்டுச் சிந்திப்பதாகவும் சொன்னார்:

’இஸ்லாமியர்கள் சூரியன் பூமியை தினமும் மற்றும் ஆண்டுதோறும் சுற்றிவருவதாகச் சொல்கிறார்கள். ஆனால், உங்களுடைய மற்றும் எங்களுடைய கோட்பாட்டின்படி பூமி தன்னுடைய சுழல் அச்சில் தினமும் தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது. முஸல்மான்கள் தாலமியின் வானவியல் கோட்பாட்டைப் பின்பற்றுகிறார்கள். நாங்கள் புராதன நூல்களைப் பின்பற்றுகிறோம். நீங்கள் உங்களுக்கென தனி வழிமுறை வைத்திருக்கிறீர்கள். அது எங்களுடையதில் இருந்து வந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்’ என்றார்.

இந்தக் கடிதத்தை இந்த இடத்தில் நிறுத்த வேண்டியிருக்கிறது. அது குழப்பத்தையே ஏற்படுத்தும் என்று தெரியும். ஆனால், ஹிந்து மதத்தில் இருக்கும் வானவியல் தெரிந்த நபர்கள் தமக்குத் தெரிந்தவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதில் மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள். 

பாகம் - 5

பழங்கால இந்துக்களுக்கு  இருபடித் தேற்றம் தெரிந்திருந்தது  என்பதற்கான ஆதாரம்
(ரூபன் பரோ, 1790)


வங்காள விரிகுடாவின் தீவுக்கூட்டங்களில் பெரும்பாலானவை கிளிஞ்சல்களாலும் கடல் வாழ் உயிரினங்களின் ஓடுகளாலும் நிரம்பிக் கிடக்கின்றன. கங்கைச் சமவெளியின் ஹரித்வார் பகுதியில் மிக நீண்ட கூழாங்கல் படுகைகள் காணப்படுகிறன. இவற்றிலிருந்து இந்தக் கடல் மெள்ளப் பின்வாங்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. அதுபோலவே நில நடுக்கோடானது இப்போது இருக்கும் இடத்திலிருந்து முன்பு மேலும் வடக்கில் இருந்திருக்கும் என்றும் தெரிகிறது.

வேறு நாடுகளிலும் இதுபோன்ற ஆய்வுகள் செய்து பல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றிலிருந்து பூமி, துருவங்கள் நிலநடுக்கோடு போன்றவை முன்பு எப்படி இருந்தன என்னென்ன மாற்றங்கள் பூகோள ரீதியாக நடந்துள்ளன என்பதை ஓரளவுக்கு யூகித்து அறிய முடியும்.  அது பல்வேறு கேள்விகள், புதிர்களுக்கு விடையளிக்கக்கூடும். இதற்காகத்தான்  வட தீர்க்க ரேகைப் பகுதிகளில் நிரந்தரமான மெரிடியன் கோடுகளை வரைந்து வைப்பது அவசியம். அப்போதுதான் பின் வரும் காலங்களில் ஏற்படும் மாற்றங்களை ஒப்பிட்டு ஆராய அது உதவும்.  அதுபோலவே கடல் பாறைகளில் இப்போதைய கடல் மட்டத்தின் அளவைக் குறித்து வைக்கவேண்டும்.

நில நடுக்கோட்டில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதிகளில் தார்தாரி பகுதியில் மக்கள் வாழ முடியும். சைபீரிய தட்பவெப்பநிலையானது மிதமாக இருக்கிறது. புஹாரியாவின் பாலைவனப் பகுதிகள்தான் மோசஸ் சொல்லும் வாக்களிக்கப்பட்ட பூமியாக இருக்கும். ஏதெனின் நான்கு புனித ஆறுகள் முறையே இந்தியா, சீனா, சைபீரியா, காஸ்பியன் கடல் வழியாகப் பாய்ந்திருக்கும்.

இந்தியாவின் வட பகுதியில் இருந்த ஒரு பிராமணரிடம் இருந்த சம்ஸ்கிருத குறிப்புகள் இருந்த உலக வரைபடத்தில் இருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தெரிந்துகொண்டேன். அவரிடம் பூகோளவியல் தொடர்பான விலை மதிப்பு மிக்க புத்தகமும் அவரிடமிருந்து எனக்குக் கிடைத்தது. திரு வில்ஃபோர்டு தலைமையிலான வங்காள இன்ஜினியர்களுக்கு இந்த புத்தகங்களையும் என்னுடைய யோசனைகளையும் சேர்த்துத் தெரிவித்திருக்கிறென். அவர் முதல் நபராக ஹிந்து பூகோளம் தொடர்பான தெளிவான உண்மையான தரவுகளை உலகுக்கு விரைவில் தருவார் என்று நினைக்கிறேன்.

மேலே சொன்ன கங்கைப் பகுதியில் இருந்து இந்து மதம் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வட துருவ நாடுகளிலும் அவர்களின் வழிபாடுகளுக்கான தடயங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தில் இவை மிகவும் துலக்கமாகத் தெரிகின்றன. அங்கு இருக்கும் ஸ்டோன்ஹென்ஜ் (Stonehenge) என்பது இந்து வேர்கள் கொண்ட கோவில்களில் ஒன்றே. கணிதவியல், வானவியல், ஜோதிடம், விடுமுறைகள், விளையாட்டுகள், நட்சத்திரங்களின் பெயர்கள், நட்சத்திரத் தொகுப்புகளின் பெயர்கள், பழங்கால நினைவுச் சின்னங்கள், சட்டங்கள், பல்வேறு நாடுகளின் மொழிகள் என அனைத்திலும் மூல இந்திய வேர்களின் தடயங்களைக் காண முடியும். சூரிய வழிபாடு, அக்னி வழிபாடு; நரபலி, விலங்கு பலிகள் போன்றவை உலகம் முழுவதிலும் ஒருகாலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளன.

ரோமாபுரி மதச் சடங்குகள் பல கங்கைச் சமவெளியினர் மற்றும் ஃபகீர்களின் அப்பட்டமான நகலாகவே இருக்கின்றன.  கிறிஸ்தவ இறையியல் என்பது மூல பைராகிகளின் அசிங்கமான வழிமுறைகளைப் போன்றதாகவே இருக்கின்றன. வடதுருவப் பகுதிகளின் நரகம் பற்றிய நம்பிக்கைகள் கூட ஒரு சில இடங்கள் நீங்கலாக பைபிளில் சொல்லப்பட்டிருப்பதைப் போன்றதாக இருக்கவில்லை.  ஆனால் ஹிந்துக்களின் நரக சித்திரிப்புகளைப் பெரிதும் ஒத்ததாக இருக்கின்றன.

புனித பேட்ரிக்கின் மரணத்துக்குப் பிந்தைய தூய்மைப்படுத்தப்படும் நிகழ்வில் குறிப்பிடப்பட்டிருக்கும் படைவீரர் பற்றிய கதை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருப்பதன் அப்பட்டமான நகலாகவே எனக்குத் தோன்றுகிறது. பெயர்களை மட்டும் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ரோமாபுரி மதமும் தேயிஸமும் (Deism) இந்து மதத்தின் பிரம்மம், (பஞ்ச) பூதம் போன்றவற்றில் ஒரே மாதிரியான கோட்பாடுகளையே கொண்டிருக்கின்றன. தாலமிய வானவியல் கோட்பாட்டின் மூல கர்தாக்கள் பிராமணர்களே. அதுபோலவேதான் பஞ்ச பூதக் கோட்பாட்டை முன்வைத்தவர்கள்தான் ஃபிலோலைக் அல்லது கோப்பர்நிக்கஸ் கோட்பாடுகளின் மூன்னோடிகளாக இருக்கவேண்டும். அவர்கள்தான் கிரகங்களிடையேயான ஈர்ப்புவிசை பற்றிய கோட்பாட்டையும் முதலில் கண்டு சொன்னவர்களாக இருக்கும்.

இலூசினிய புதிர்கள், கிரேக்க மதம் போன்றவை இரண்டு மாறுபட்ட பிரிவுகளின் உருவாக்கங்களாகவே இருக்கக்கூடும். பிரிட்டனின் ட்ரூயிட்கள் (செல்டிக் மதகுருமார்கள்) பிராமணர்களாக இருந்தவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் எல்லாரும் கொல்லப்பட்டுவிட்டார்கள்; அவர்களுடைய அறிவுத்துறை சாதனைகள் எல்லாம் அழிந்துவிட்டன என்று சொல்வதில் உண்மையிருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இப்போது பள்ளிக்கூட ஆசிரியர்களாகவும் ஃப்ரீமேசன்களாகவும் ஜோதிடர்களாகவும் ஆகியிருக்கக்கூடும். தமது ஞானங்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்கு மாற்றித் தர இதுவே சரியான வழி என்று நினைத்திருக்ககூடும்.

லாக்கேவுக்குக் (Locke) கிடைத்திருக்கும் ஒரு ஆவணமானது எவ்வளவு பழையானது என்பதற்கும் இந்த யூகத்துக்கும் சான்று பகர்வதாக இருக்கிறது. இந்த யூகத்தின் அடிப்படையில் பல விடைதெரியாத புதிர்களுக்கும் ஹிந்துக்களின் மற்றும் நமது அறிவியல் துறைகளுக்கும் இடையிலான மிகப் பெரிய ஒத்திசைவுக்குமான விளக்கத்தைப் பெற்றுவிடமுடியும்.  நமது பழங்கால அறிவியல் மேதைகள் எழுதியவற்றையும் ஹிந்துக்களின் பழங்கால நூல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த விஷயம் சந்தேகத்துக்கு இடமின்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

அதிர்ஷ்டவசமாக பீட் (Bede)யின் எழுத்துகள் நம்மை 1200 ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. ட்ருயிட்களின் காலகட்டத்து எச்சங்கள் மிஞ்சியிருந்த காலகட்டம். நானே இவற்றை ஒப்பிட்டுப் பார்த்திருக்கவேண்டும். ஆனால், பீட் இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. நாகரி மொழியில் குறிப்புகள் எழுதப்பட்ட வான் ஆராய்ச்சிக் கருவியை (டாக்டர் மெக்கினோன் ஜெய்நகரில் இருந்து கொண்டுவந்தது) ஜெஃப்ரி சாசர் எழுதிய வான் ஆராய்ச்சிகருவி பற்றிய நூலுடன் ஒப்பிட்டுப் பார்த்தேன். நுட்பமான அம்சங்களில்கூட ஆச்சரியப்படும் அளவிலான ஒற்றுமை இருப்பதைப் பார்க்க முடிந்தது. ”குதிரைத் தலை’ என்று சாசர் குறிப்பிடும் மைய ஊசியானது குதிரைத் தலை கொண்டதாகவே ஜெயநகர் வான் ஆராய்ச்சிக் கருவியில் இருக்கிறது.

ஜெஃப்ரி சாசரின் விவரிப்புகள் பீட் குறிப்பிட்டதில் இருந்துதான் பெறப்பட்டிருக்கும் என்றால் என் இந்த யூகம் சரி என்றே ஆகும். அராபியர்களிடமிருந்து எதையும் பெறவில்லை என்பதை அது உறுதிப்படுத்துவதாக ஆகும். தாமஸ் பங்கேயும் ஸ்விசெட்டும் என்ன  எழுதியிருக்கிறார்கள் என்பதையும் ஹிந்து நூல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். லீலாவதி, பீஜகணிதம் அல்லது இந்துக்களின் கணித, அல்ஜிப்ரா நூல்களின் மொழிபெயர்ப்புகளை விரைவில் வெளியிடவும் நான் தீர்மானித்துள்ளேன்.

வரலாறு தொடரும்...வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)