பதிவு செய்த நாள்

14 ஆக் 2017
13:36

தமிழில் இரண்டு ர, ற எழுத்துகள் உள்ளன. சிலர் இதை, சின்ன ர பெரிய ற என்கிறார்கள். அப்படி சொல்லக் கூடாது. ர என்ற எழுத்து யரலவழள என்னும் இடையின எழுத்தாகும். அதனால் இதை “இடையின ர” என்று சொல்ல வேண்டும். இன்னொரு எழுத்து வல்லின ற. கசடதபற என்ற வரிசையில் வருகிறது.

இதனை உச்சரிக்கும்போது, நன்கு அழுத்தி “ட்ர” என்று உச்சரிக்க வேண்டும். “ர்ர்ர” என்பது போலவும் உச்சரிக்கலாம். ஆனால், அழுத்தமாய் உச்சரிக்க வேண்டும். எழுதும்போது இரண்டு ர, ற எழுத்துகளுக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும். பேசும்போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் உச்சரிப்புப் பழக்கம் இருக்கும். அதனால் போதிய வேறுபாடு இல்லாமல் போகலாம்.

ஆகவே, பேசும்போது இடையின ர, வல்லின ற என்றே கூறுவது நலம். அதனால் எந்தக் குழப்பமும் தோன்றாது. சிலர் சிறப்பு ற என்று கூறுவார்கள். தமிழில் ஓரெழுத்து சிறப்புடையது, மற்றோர் எழுத்து சிறப்பில்லாதது என்று வேறுபாடு கற்பிப்பது தவறு. தமிழ் எழுத்துகள் எல்லாமே சிறப்பானவைதாம். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எடுத்துக்காட்டாக, ''ர” வரிசை எழுத்துகள் ஒரு சொல்லுக்கு முதல் எழுத்தாகத் தோன்றமாட்டா.

ஒரு சொல்லுக்கு நடுவிலோ சொல்லுக்குக் கடைசி எழுத்தாகவோதான் தோன்றும். மரம், குரங்கு, வரப்பு, கருவி, குருவி, திரு, கரு, பயிர், உயிர், செஞ்சுடர் போன்ற சொற்களைப் பாருங்கள். ர என்ற எழுத்து, சொல்லுக்கு நடுவில் வந்திருக்கிறது அல்லது சொல்லுக்குக் கடைசியாக வந்திருக்கிறது. அப்படித்தான் வரும். ரங்கன், ராமசாமி, ரூபாய், ரோம் நகரம் என்று சிலர் எழுதுகிறார்கள். அது தமிழ் இலக்கணப்படி தவறு. அச்சொற்களுக்கு முன்பாக உயிரெழுத்தை இட்டு எழுதவேண்டும். அரங்கன், இராமசாமி, உரூபாய், உரோம் நகரம் என்றுதான் எழுத வேண்டும்.

தமிழறிஞர்கள் அவ்வாறுதான் எழுதுவார்கள். அதேபோல், ல(ள ழ) வரிசை எழுத்துகளும் சொல்லின் முதல் எழுத்தாகத் தோன்றாது. சொல்லுக்கு நடுவிலும் கடைசியிலும் தோன்றும். லட்சுமி என்பதை இலட்சுமி என்றுதான் எழுதவேண்டும். நாகரிகமாக எழுதுவதாக நினைத்து, 'றெக்கை' என்றெல்லாம் எழுதுகிறார்கள். இறக்கை என்பதுதான் சரி. ர ற ல ள ழ இந்த வரிசை எழுத்துகள் மொழி முதல் எழுத்தாக வராதவை என்று தமிழ் இலக்கண நூல் கூறுகிறது.

முன்பாக உயிர் எழுத்து சேர்ந்து வரும். அதேபோல், சொல்லுக்கு நடுவில் உயிர் எழுத்துகள் தோன்றாது. சொல்லுக்கு கடைசியில் வரும். அடி, உதை, பல சில. 'கஉதாரி'என்று சொல்லுக்கு நடுவில் உயிர் எழுத்தை எழுதினால் நன்றாகவா இருக்கிறது நீங்களே பாருங்கள்!

- மகுடேசுவரன்வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Noolveli:
New to Noolveli ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)